தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வுத் திட்டம் : ராஜபக்ச கைவிரிப்பு
தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு திட்டங்கள் எதனையும் இப்போதைக்குச் செயற்படுத்தப் போவதில்லை என்பதை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் 'தெகல்கா' இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :
வேகமாக அதிகாரப் பரவலாக்கத்திற்குச் செல்வதற்கே நான் விரும்புகிறேன்.ஆனால் நாடாளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையே எனக்கு இருக்கிறது.அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பெரியளவில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.
நான் வேகமாக அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கிச் சென்றாலும் அது பயன் தராது. அது, ஆபிரகாம் லிங்கன் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு போரைப் போன்ற ஒரு போரை இங்கும் ஏற்படுத்திவிடக்கூடும்.ஏனெனில் பிரபாகரனது ஒரே இலக்கு என் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிய நாடு ஒன்றை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்தியாவும் சிறிலங்காவும் இதயமும் ஆன்மாவும் போன்றன. சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் நெருங்கிச் செயற்படுவது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எந்த அழுத்தங்களும் வரவில்லை.இந்த விடயத்தை இந்தியா மேலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே எங்களிடம் இருந்தது.அழுத்தங்கள் மேற்கில் இருந்துதான் வந்தன.
பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடுவதற்காகவோ, அழுத்தங்களுக்கு பணிந்து விடுவதற்காகவோ என்னை அதிபராக என் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்தியாவின் உணர்வுகள் தொடர்பான விடயத்தில் நான் கவனமாக இருக்கிறேன்.ஏனெனில் இந்திய எனது மூத்த நண்பன். இதனை நான் மேற்கின் அதிகார சக்திகளுக்குத் வெளிப்படையாகச் சொல்கிறேன்.
நான் நண்பர்கள் என்று கூறினாலும்கூட, எல்லா நாடுகளுமே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் யாருடைய கைப்பாவையும் கிடையாது.அப்படி இருக்கப் போவதும் இல்லை.நான் ஒரு சிறிலங்கா தேசியவாதி.
நான் பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக, எந்தவொரு நாடும் சிறிலங்காவைப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று இப்போதே நான் உறுதி தருகிறேன்.
தமிழர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வெளியாட்கள் எனக்கு விரிவுரை நிகழ்த்தத் தேவையில்லை.அவர்கள் எனது மக்கள்.அவர்கள் தொடர்பில் என் நாடு பெருமைப்படுகிறது.
நாட்டில் உள்ள எல்லா மக்களையும் போன்று அவர்களுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை.எனது குடும்பத்தில் தமிழர்களுடன் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.என் அமைச்சரவை தமிழர்களைக் கொண்டுள்ளது.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது அவர்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய மேற்குலக நாடுகள், அத்தனை விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அவர்களின் நாட்டில் அகதி தகுதிநிலை கொடுப்பார்களா?
இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அடிமட்ட நிலையில் அதிகாரம் பகிரப்படுவதை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்.தமிழ் மொழியையும் மதிக்கிறேன்.மக்கள் தமது தாய் மொழியை மதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அரசியல் தீர்வு என்னால் தாமதப்படவில்லை.அது புலிகளாலேயே நிகழ்ந்தது.யார் எல்லாம் தீர்வு குறித்துப் பேசினார்களோ அவர்கள் எல்லோரும் ஆயுதமுனையில் கடத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று நான் வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன்.அது இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது.சிறிலங்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது.இனப்படுகொலை என்பது ஒரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் மற்றைய சமூகம் முற்றாக அழிக்கப்படுவதைக் குறிக்கும்.அவ்வாறு எந்த ஒரு இனமும் எனது நாட்டில் அழிக்கப்படவில்லை.அத்தகைய பயங்கரச் செயல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசுகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒன்றும் இடி அமீன் ஆதரவாளர்கள் அல்லர்.
இத்தகைய குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் மேற்குலக நாடுகள் மற்றும் அங்குள்ள ஊடகங்களின் செயல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவதற்கு ஒப்பானது.நாங்கள் எங்கள் எல்லையில் இருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அப்பாவி மக்களைக் குண்டுவீசிக் கொல்லவில்லை.
போர்ப் பகுதிகளில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு வருமாறு இந்தியாவையும் உலக நாடுகளையும் நான் மீண்டும் அழைக்கிறேன்.
எனக்கு முன் உள்ள பெரிய சவாலே, எனது தமிழ்ச் சகோதரர்களுக்கு முன்னரைவிட பாதுகாப்பானதும் சிறப்பானதுமான வாழ்வு காத்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதுதான் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் ராஜபக்ச.