வவுனியா முகாம்களில் மூளைக்காய்ச்சலினால் 34 பேர் உயிரிழப்பு

செவ்வாய், 7 ஜூலை 2009 (19:10 IST)
வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய் வேகமாகப் பரவுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் 34 பேர் கடந்த மூன்று மாத காலத்தில் உயிரிழந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கடந்த மூன்று மாதங்களில் இதனால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக வவுனியா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்திருக்கின்றார். உயிரிழந்தவர்களில் 24 பேர் இளைய வயதினர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வைரஸ் மூலம் தொற்றுகின்ற இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் வவுனியாவில் இல்லாத நிலையில் கண்டியில் உள்ள மருத்துவ நிபுணர்களின் உதவியோடு இந்த நோயை தொடக்க நிலையில் அடையாளம் காண்பதற்கான வசதிகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்