லாகூர் தொடர் குண்டுவெடிப்பில் குற்றம்சாற்றப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், இனிமேல் அவருக்கு மன்னிப்பு அளிப்பது அதிபர் சர்தாரியின் கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சரப்ஜித் சிங்கிற்கு தொடர்புள்ளது என பாகிஸ்தான் அரசு குற்றம்சாற்றியது.இதையடுத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு ஏப்ரலில் சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பிரதமர் யூசுப் ரஸாக் கிலானி இப்பிரச்சனையில் தலையிட்டதால், அந்நாட்டு அதிகாரிகள் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை ஒரு மாதம் தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.
அந்த ஒரு மாத காலம் முடிவடைவதற்கு உள்ளாகவே, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை காலவரையின்றி தள்ளிவைப்பதாக மறுஅறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சரப்ஜித் சிங் சார்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
சரப்ஜித் சிங்கின் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. ஆனால் சரப்ஜித் வழக்கறிஞர் நேரில் ஆஜராகாத காரணத்தால் வழக்கை இன்று வரை தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இன்று அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்த போது, சரப்ஜித் சிங் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சரப்ஜித் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே சரப்ஜித் சிங் தண்டனை நிறைவேற்றப்படுவது கிடப்பில் போடப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய சட்டத் துறை அமைச்சரும், தற்போதைய பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவை தலைவருமான ஃபரூக் நயீக் , சரப்ஜித் சிங்கை சிறையில் சந்தித்து அவரது வழக்கை ஆய்வு செய்தார்.சரப்ஜித் சிங்கிற்கு அதிபர் சர்தாரி மன்னிப்பு அளிப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.ஆனால் அதன் பின்னர் அந்த விவகாரம் அப்படியே முடங்கிப்போனது.
இந்நிலையில், தற்போது நீதிமன்றம் சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை நிராகரித்துள்ள நிலையில், சரப்ஜித் சிங்கிற்கு மன்னிப்பு அளிப்பதா அல்லது தண்டனையை நிறைவேற்றுவதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அதிபர் சர்தாரியிடமே உள்ளதாக ஃபரூக் தெரிவித்துள்ளார்.