எஸ்.சி.ஓ. மாநாட்டில் ஈரான் அதிபர்

செவ்வாய், 16 ஜூன் 2009 (13:16 IST)
மாஸ்கோ : அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ஈரானில் கலவரம் நடைபெற்று வருகிற நிலையிலும், எஸ்.சி.ஓ. உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாத் ரஷ்யா வந்துள்ளார்.

ஈரானில் கடந்த 12ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் முகமது அகமது நிஜாத்தை எதிர்த்து மவுசாவி போட்டியிட்டார். இந்த தேர்தலில் முகமது அகமதி நிஜாத் 62.6% வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை.தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மவுசாவி ஆதரவாளர்கள் புகார் கூறியதுடன், அகமதி நிஜாத் ஆதரவாளர்களுடன் பல இடங்களில் மோதினர்.

தெஹ்ரான் நகரில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிற நிலையில், நேற்றைய கலவரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், ரஷ்யாவின் ஏக்தரின்பர்க் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ( எஸ்.சி.ஓ. ) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் அதிபர் அகமது நிஜாத், இன்று ரஷ்யா வந்து சேர்ந்தார்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், பின்னர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் இடார- டாஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்