தடையை நீக்குங்கள்: இந்திய அரசுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை

வியாழன், 4 ஜூன் 2009 (14:09 IST)
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும்படி, இந்திய அரசுகு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிங்கள இனவாத அரசானது எமது தலைமையினையும், விடுதலைப் போராட்டத்தினையும் அழித்துவிட்டதாக பலவாறான பொய்யான பரப்புரைகளையும், கட்டுக்கதைகளையும் கூறிவருகிறது. இதற்கு சிங்களத்தின் ஒட்டுக்குழுக்களும், ஊது குழல்களாக செயற்படத் தொடங்கியுள்ளன. இவ்வாறான பரப்புரைகளால் எமது மக்களின் விடுதலை உணர்வை அடியோடு அழித்துவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிங்கள அரசு வெளியுலகிற்குத் தெரியாமல் பாரிய அளவில் இனச் சுத்திகரிப்பைச் செய்துவருகிறது. இன்று எம் உறவுகள் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்டு குடும்பம், உறவுகளை இழந்து தாங்கொனாத் துயரை அனுபவித்துக்கொண்டு திறந்தவெளிச் சிறைக்குள் அடைபட்டு இன்னல் படுகின்றனர்.

பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடுமைகள் செய்கின்றார்கள். வயது வந்த ஆண் பிள்ளைகளை விடுதலைப்புலிகள் எனக் கூறி விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் போகின்றார்கள். தினம் தினம் நரக வேதனையினை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அரசு எமது மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு மறைப்பதற்கு திட்டமிட்ட பல கற்பனைக் கதைகளைக் கூறிவருகின்றது. சுயாதீனமாக அரசு சார்பற்ற நிறுவனங்களை இயக்கவிடாமல் தடுக்கின்றது. உலகநாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு சிங்கள அரசினால் தயார்ப்படுத்தப்பட்ட பொதுமக்களை அனுமதிக்கின்றது. ஒட்டுமொத்த ஊடகங்களில் வரும் செய்திகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கண்காணிப்பின் மத்தியிலேயே இயங்கும் துர்ப்பாக்கியமான நிலையில் ஊடகத்துறையினர் மௌனிகளாக செயற்படுகின்றனர். பாதுகாப்பு என்ற போர்வையில் அனைத்து விதமான செயற்பாடுகளையும் இலங்கஅரசமுடக்கி வருகின்றது.

காலத்துக்குக் காலம் எமது மக்களின் விடுதலை உணர்வை அழிப்பதற்கு பலவழிகளிலும் எதிரி கங்கனம் கட்டி கூட்டாகச் செயற்பட்டுள்ளான் என்பது எமது மக்கள் நன்கறிந்த உண்மை.

எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள், தலைவர்கள் எமது மக்களின் விடுதலைக்கு காட்டிடும் அபரிமிதமான ஆதரவினைக்கண்டு வியந்து நிற்கின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் இதனைவிட அதிகமான ஆதரவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இந்திய அரசு உண்மையான நண்பனை இனம் காணத்தவறியுள்ளதுடன், மாறாக சிங்கள அரசின் செயற்பாடுகளிற்கு ஆதரவுக்கரம் துணைபோகின்றது. சிங்கள அரசின் கபடத்தனத்தை உணரும் காலம் விரைவில் வரும்.

இந்திய அரசு விடுதலை எமது அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு இந்திய மக்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மத்திய அரசிற்கு எமது மக்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரியப்படுத்தி தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் வேண்டி நிற்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்