இந்தியா-நேபாளம் இடையிலான நம்பிக்கை குறைந்து வருகிறது: பிரச்சண்டா

திங்கள், 11 மே 2009 (17:51 IST)
காட்மாண்டு: சீன அரசுடன் நேபாளம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக இந்தியா அச்சப்படுவதில் அர்த்தமில்லை எனத் தெரிவித்துள்ள நேபாள அரசின் காபந்துப் பிரதமர் பிரச்சண்டா, தனக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான நம்பிக்கை குறைந்து வருவதாகக் கூறினார்.

பொதுமக்களுக்கு அதிகாரம் மிக்க (ராணுவத்திற்கு எதிராக) ஒரு அரசை அமைக்கவே நாங்கள் (மாவோயிஸ்ட்) போராடி வருகிறோம். ஆனால் இவ்விடயத்தில் இந்தியாவின் புதிய நிலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

குடியரசுத் தலைவரின் அரசியல் சட்டங்களுக்கு மீறிய நடவடிக்கைகளை ஆதரிப்பதும், ராணுவத் தளபதியை ஆதரிப்பதும், பொதுமக்களுக்கு அதிகாரம் மிக்க அரசை உருவாக்குவதற்கு எதிரானதாகும் என தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரச்சண்டா கூறியுள்ளார்.

இந்தியா-நேபாளம் இடையிலான நம்பிக்கை குறைந்து வருகிறதா? என்ற கேள்விக்கு, இருக்கலாம்; ஆனால் இவ்விடயத்தில் இந்தியாவுடன் விவாதம் நடத்துவது அவசியம் என்றார்.

தற்போது நேபாளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அமைதி நடவடிக்கை தோல்வி அடைந்தால், அது இரு நாடுகளுக்கும் (இந்தியா, பாகிஸ்தான்) நன்மை அளிக்காது என்று பிரச்சண்டா எச்சரித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை குறைந்ததற்கு இந்திய அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளே காரணம் எனக் குற்றம்சாற்றியுள்ள பிரச்சண்டா, தற்போது இந்திய தலைவர்கள் அனைவரும் தேர்தல் பரபரப்பில் இருப்பதால் அதிகாரிகளே நேபாளம் தொடர்பான விடயங்களை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என விளக்கினார்.

சீனாவுடனான தனது நெருக்கத்தை நேபாளம் அதிகரித்து வருவதாக இந்தியா கருதுவது குறித்த கேள்விக்கு, இதுபோன்ற ஐயப்பாடு ஆதாரமற்றது; இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் கேலிக் கூத்துக்கு சமமானது என பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்