ஒபாமா அரசில் 2 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பதவி
ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (11:03 IST)
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 2 அமெரிக்கர்களுக்கு தனது அரசில் முக்கிய பதவி வழங்கி அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி விவசாயத்துறையின் கல்வி மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான துணைச் செயலராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ராஜ்ஷா-வையும், முதன்மை செயல் நிறைவேற்றும் அதிகாரியாக பால் சோப்ரா-வையும் நியமிப்பதாக வாராந்திர வானொலி பேட்டியில் பராக் ஒபாமா இன்று கூறியுள்ளார்.
தற்போது விர்ஜீனியாவின் தொழில்நுட்பப் பிரிவு செயலராக பணியாற்றி வரும் பால் சோப்ரா, முதன்மை தொழில்நுட்ப அலுவலர் பதவியைப் பயன்படுத்தி பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதேபோல் தற்போது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் சர்வதேச விவசாய மேம்பாட்டுப் பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வரும் ராஜ்ஷா, நாட்டின் விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.