புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அமெரிக்காவுடன் கூட்டு: இந்தியா விருப்பம்

புதன், 25 மார்ச் 2009 (12:19 IST)
பூமியின் பருவநிலை மாறி வரும் நிலையில், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கூட்டு வைத்து கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் நடந்த அமெரிக்க-இந்திய வர்த்தகப் பேரவையின் உறுப்பினர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த பருவநிலை மாற்றத்திற்கான பிரதமரின் சிறப்புக் குழுவின் தலைவர் ஷ்யாம் சரண், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி பற்றாக்குறை ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என விரும்பினால், புதுப்பிக்கக் கூடிய, மரபுசாரா எரிசக்திக்கு நாம் மாற வேண்டும் என்றார்.

பருவநிலை மாற்றமும், எரிசக்தி பாதுகாப்பும் இதனை நமக்கு உணர்த்தியுள்ளதாக தெரிவித்த அவர், கார்பன் இல்லாத பொருளாதாரத்திற்கு உலக நாடுகளை அழைத்துச் செல்ல நேர்மையான, உண்மையான பன்முகத் தன்மையுடைய திட்டம் வகுக்கப்பட அனைத்து நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இவ்விடயத்தில் உலக நாடுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதைக் காண இந்தியா விரும்புவதாகவும் ஷ்யாம் சரண் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்