போர் நிறுத்தம்: ராணுவம், புலிகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:49 IST)
இலங்கையில் பொதுமக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யும் வகையில், அந்நாட்டு ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான கீ- மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் பலியாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்றார்.

சமீபகாலமாக அங்கு நடந்து வரும் மோதல்களில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு இருதரப்புமே காரணம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது என்றும் பான் கி மூன் தெரிவித்தார்.

எனவே, போர் நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக, வன்னியில் நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், அரசியல் ரீதியான தீர்வு மூலம் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் ஐ.நா மேற்கொள்ளும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்