இலங்கை பிரச்சினை: தமிழர் கட்சி தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே!
வெள்ளி, 20 பிப்ரவரி 2009 (11:59 IST)
இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழர் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி, அதிபர் ராஜபக்சேவுக்கு ஐ.நா.சபை மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இதன் எதிரொலியாக, இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில், தமிழர் கட்சி தலைவர்களை சந்தித்து பேச அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சியான தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜன நாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் அழைத்து பேசவுள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஹித பொகலகாம செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், "இந்த சந்திப்பின்போது இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதுடன், போருக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நிவாரணம் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது" என்றார்.