ஐ.நா சபை முன் தீக்குளித்த இளைஞருக்கு சுவிஸ் தமிழர்கள் அஞ்சலி
சனி, 14 பிப்ரவரி 2009 (11:47 IST)
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன் சிறிலங்க அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக நேற்று முன்தினம் (வியாழன்) இரவு 8.15 மணியளவில் வந்த இளைஞர் முருகதாசன், சுமார் 9.45 மணியளவில் திடீரெனத் தீக்குளித்தார் என புதினம் செய்தி தெரிவிக்கிறது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞர் முருகதாசனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், இளைஞர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்து விட்டார் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சுவிஸ் தமிழ் இளைஞர்கள் சார்பில் ஐ.நா. சபையின் முன் கவன ஈர்ப்பு நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் ஈழத் தமிழர் நலனுக்காக தீக்குளித்து உயிர்நீத்த முருகதாசனுக்கு ஏராளமான தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர்.
புலம்பெயர்ந்திருந்த நிலையிலும் தாயகத்தினதும், தமிழீழ விடுதலையினதும் அளப்பரிய பற்றினால் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முருகதாசனின் மரண செய்தி கேட்டு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
கதறியழும் தாய்மார், கண்ணீர் விட்டு அழும் மாணவர்கள், உணர்வுகளை அடக்க முடியாது எல்லோரையும் சோகம் சூழ எமது மக்கள் மீதான சிறிலங்கா அரசின் கொலை வெறி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என முழக்கம் இட்டவாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலை ஊடறுத்துச் செல்லும் பிரதான சாலையை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றித்திருந்த மக்கள், காவல்துறையினரின் தடைகளையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்தனர்.
இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.