இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடர பாகிஸ்தான் விருப்பம்
சனி, 7 பிப்ரவரி 2009 (17:30 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் இரு நாடுகளுடைய சிக்கலை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடரவே விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ‘அணு ஆயுத பரவல், ஆயுதக் கட்டுப்பாடு, அணு ஆயுதங்களின் எதிர்காலம் - அணு ஆயுதமற்ற நிலை சாத்தியமா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் அயலுறவுச் செயலர் ஷா மெஹ்மீத் குரேஷி பேசினார்.
அப்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் நட்புறவுள்ள அண்டை நாடுகளாக விளங்க வேண்டியது முக்கியம். பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு இந்தியாவுடனான உறவை மிகவும் சுமுகமான முறையில் நடத்திச் சென்றது.
எனினும், மும்பை மீதான தாக்குதலுக்குப் பின்னர் இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது. எனவே கடந்த 2004இல் துவங்கப்பட்ட பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் மீண்டும் தொடர வேண்டும் எனக் கூறினார்.
அதே தருணத்தில் மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான தண்டிக்கும் எண்ணத்துடன் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருவதால், அத்தாக்குதல் தொடர்பான புலனாய்வு நேர்மையான, ஆய்வுக்கு உட்படக் கூடிய வகையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.