தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சிறிலங்க அரசு நடத்தி வரும் தாக்குதலில் சிக்கி ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவுக்கு, ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் கவலை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்து வரும் ஆதாரம் சார்ந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இந்தியா வந்த பான்-கி-மூன், சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து பான்-கி-மூன் கவலை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்க அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், விடுதலைப்புலிக்ளுக்கு எதிரான சிறிலங்காவின் நடவடிக்கைகள் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என ஐ.நா செயலர் பான்-கி-மூனிடம், அதிபர் ராஜபக்ச உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறிய 320 பேர் இன்று காலை சிறிலங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கடந்ததாகவும், மேலும் 300 பேர் எல்லையைக் கடக்கக் காத்திருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நனயக்காரா, நேற்று மட்டும் 1,637 பொதுமக்கள் போர் நடக்கும் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.