கராச்சி துறைமுகப் பகுதிக்கு அருகே தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 50 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த 9 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் 9 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 50 பேரை கைது செய்துள்ளோம். நாளை (இன்று) அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனக் கூறினர்.
ஏழ்மையில் வாடும் இந்திய, பாகிஸ்தானிய மீனவர்கள் தங்கள் நாட்டு எல்லைப் பகுதிகளை கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். கடந்தாண்டு துவக்கம் வரை ஏராளமான மீனவர்களை தங்கள் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய, பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஆனால் இருநாடுகளுக்கிடையே சுமூக உறவு ஏற்பட்ட பின்னர் அதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஓரளவு குறைந்திருந்தது. இந்நிலையில், மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் 50 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.