வன்னி பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்க படை தாக்குதல்: 43 பேர் பலி
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (12:35 IST)
இலங்கையின் வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயம் மற்றும் உடையார்கட்டில் உள்ள மருத்துவமனை ஆகியவற்றின் மீது சிறிலங்கப் படையினர் நேற்று முழுவதும் நடத்திய கடும் எறிகணை, வெடிகணை, பீரங்கித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 155 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது சிறிலங்க படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நேற்று நடத்தினர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்தனர்.
சிறிலங்க படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றிலுமாக சேதமடைந்ததைத் தொடர்ந்து வன்னியில் உள்ள மக்களுக்கும் உடையார்கட்டு மருத்துவமனைதான் சேவையாற்றி வந்தது. நேற்று இந்த மருத்துவமனையையும் இலக்கு வைத்து சிறிலங்க படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான சுதந்திரபுரம், இருட்டுமடு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது நேற்று முழுவதும் சிறிலங்க படையினர் எறிகணை, வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் சுதந்திரபுரம் பகுதியில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். இருட்டுமடு பகுதியில் 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 42 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல் வள்ளிபுனம் பகுதியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். தேவிபுரம் பகுதியில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.