பெனாசிர் படுகொலை விசாரிக்க விரைவில் தனிக்குழு: பான்-கி-மூன்

வியாழன், 5 பிப்ரவரி 2009 (14:03 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை குறித்து விசாரிக்க விரைவில் ஐ.நா. தரப்பில் தனிக்குழு அமைக்கப்படும் என ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச் செயலராக பதவியேற்று 2 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக நேற்று பாகிஸ்தானுக்குச் சென்ற பான்-கி-மூன், அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பான்-கி-மூன், பெனாசிர் படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா.வில் உள்ள சிறந்த அதிகாரிகளை தலைமையாகக் கொண்டு தனிக்குழு விரைவில் உருவாக்கப்படும் என்றார்.

கடந்த 2007 டிசம்பரில் ராவல்பிண்டியில் நடந்த பேரணியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பெனாசிர் பூட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டார். அடுத்த சில நொடியிலேயே அவர் மீது தற்கொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பெனாசிர் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலை அல்-கய்டா, தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திருயிருக்கலாம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இந்நிலையில், பெனாசிர் கொலை குறித்து விசாரிக்க தனிக்குழு ஒன்றை விரைவில் ஐ.நா அமைக்கும் என பான்-கி-மூன் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்