மும்பை தாக்குதலில் வங்கதேசத்திற்கு தொடர்பு? பாகிஸ்தான் புலனாய்வில் தகவல்
வியாழன், 5 பிப்ரவரி 2009 (11:36 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடத்திய விசாரணையில், அத்தாக்குதல் தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் அமைப்பால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் புலனாய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தியில் மும்பை தாக்குதலில் வங்கதேசத்திற்கு தொடர்பிருப்பதாகவும் பாகிஸ்தான் புலனாய்வு கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களே மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என பாகிஸ்தான் புலனாய்வு தெரிவிப்பதாக அந்நாட்டின் டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல் இஸ்லாமி எனப்படும் தடை செய்யப்பட்ட இயக்கம், மும்பை மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டதுடன், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பயங்கரவாதப் பயிற்சி அளித்துள்ளதாகவும் சந்தேகிப்பதாக பாகிஸ்தான் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்நாளிதழ் கூறியுள்ளது.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரத்தின் மீது நடத்தப்பட்ட புலனாய்வு பற்றிய அறிக்கையை இந்த வார இறுதியில் உலக நாடுகளுடன் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், மேற்கூறிய தகவல்கள் அதில் இடம்பெறும் என்றும் டான் நியூஸ் தெரிவித்துள்ளது.