வன்னியில் மருத்துவமனை மீது சிறிலங்க ராணுவம் தாக்குதல்: 18 தமிழர்கள் பலி

திங்கள், 2 பிப்ரவரி 2009 (20:00 IST)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் காப்பு வலயப் பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் நேற்றிரவு நடத்திய வான்வழி எறிகணைத் தாக்குதலில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மூங்கிலாற்றில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்வான்படை நேற்றிரவு 10 மணியளவில் வான்வழியாக எ‌‌‌‌றிகணைகளை வீசித் தாக்கியது. இதில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 56 பேர் காயமடைந்தனர்.

PUTHINAM
இதேபோல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி நேற்றிரவு 11 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் மருத்துவமனையின் பெண் நோயாளிகள் இருந்த பகுதியில் அதிகளவிலான எறிகணைகள் வெடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்தனர்.

இந்த மருத்துவமனை வளாகப் பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியகங்களும் இருக்கின்றன. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.