உடனடி போர் நிறுத்தம் வேண்டும் : ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ்
சனி, 31 ஜனவரி 2009 (14:18 IST)
சிறிலங்க அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடிப் போர் நிறுத்தம் செய்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் தலைவர் ஜகோப் ஜூமா விடுத்துள்ள அறிக்கையில்,
"இலங்கையில் முடிவற்று நீடித்து வரும் மோதல் குறித்து ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது.
வடக்குப் பகுதியில் தற்போது சிறிலங்கப் படையினருக்கும் வன்னிக் காடுகளுக்குள் பதுங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடந்து வரும் சூழலில், 3,00,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சண்டை நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ளதாக சர்வதேச் செஞ்சிலுவைச் சங்கமும், ஐ.நா.வும் கூறியுள்ளன.
சுய நிர்ணய உரிமை கோரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கும் இடையில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிறிலங்காவிற்கு பெரும் அழிவு உண்டாகியுள்ளது.
இலங்கையில் தொடரும் மோதல்கள் தற்போது ஒரு இன அழிப்பு நடவடிக்கையாக மாறியுள்ளதை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, போரில் ஈடுபட்டுள்ள எல்லாத் தரப்பினரையும், குறிப்பாக சிறிலங்க அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடிப் போர் நிறுத்தம் செய்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அனுமதிக்க வேண்டும் என்று ஆஃப்ரிக்கன் தேசியக் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
மேலும், போரில் ஈடுபட்டுள்ள எல்லாத் தரப்பினரும் உடனடியாகப் போரைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, இப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.