50 குழந்தைகள், காயமடைந்தவர்கள் மீட்டது ஐ.நா குழு

வியாழன், 29 ஜனவரி 2009 (17:57 IST)
இலங்கையில் சிறிலங்க படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போரில் காயமடைந்த அப்பாவிப் பொதுமக்கள், 50 குழந்தைகளை ஐ.நா மீட்புக்குழு இன்று பத்திரமாக மீட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கப் படையினரின் தொடர் தாக்குதலால் படுகாயமடைந்தவர்களில், மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் மற்றும் 50 குழந்தைகளை ஐ.நா.வின் மீட்புக்குழுவினர் இன்று மதியம் மீட்டுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள் வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்க அரசுக்கு, விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போர் நடக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியில் 2.5 லட்சம் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

போர் நடக்கும் பகுதியில் இருந்து காயமடைந்தவர்களை மீட்பதற்காக சென்ற ஐ.நா மீட்புக் குழு கடந்த 2 நாட்களாக புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வந்தது.

இந்நிலையில், இன்று மதியம் போர் நடைபெறும் எல்லையை ஐ.நா. மீட்புக்குழு பாதுகாப்பாக கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்