3 ஆண்டுகளில் 3,700 படையினர் பலி : சிறிலங்கா
வியாழன், 29 ஜனவரி 2009 (16:48 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் போரில், கடந்த ஜூலை 2006 முதல் 13,000 விடுதலைப் புலிகளும், 3,700 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்புவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சிறிலங்கப் படைத்தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார, "கிழக்கில் மாவிலாறு பகுதியில் இருந்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட போர் நடவடிக்கைகளில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3,700 படையினரும் பலியாகியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,500 விடுதலைப் புலிகளும், 150 படையினரும் பலியாகியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
விசுவமடு நோக்கிய படையினரின் பல்முனை முன்நகர்வை முறியடிக்கும் நோக்கத்துடன் கல்மடு குளத்தைத் தகர்த்ததன் மூலம் ஏராளமான அப்பாவித் தமிழ் மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் விடுதலைப் புலிகள் சேதப்படுத்திவிட்டனர் என்றும் நாணயக்கார குற்றம்சாற்றினார்.
"கல்மடு குளத்திற்கு அருகில் உள்ள கிராமம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மக்களின் வீடுகளும், சொத்துக்களும் முற்றிலும் சேதமடைந்துவிட்டன" என்றார் அவர்.