ஐ.நா.மனித நேய பணிக்கு தடையா? விடுதலைப் புலிகள் மறுப்பு
வியாழன், 29 ஜனவரி 2009 (16:21 IST)
முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்க படையினரின் தாக்குதலால் படுகாயமுற்றுள்ள அப்பாவித் தமிழர்களை வன்னி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்படும் ஐ.நா.அமைப்புகளின் பணிக்கு தாங்கள் முட்டுக்கட்டை போடுவதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மறுத்துள்ளது.
சிறிலங்க அரசின் ஊடகமான டெய்லி நியூஸ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியைத்தான் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டுள்ளன என்று கூறியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அமைதி செயலகத்தின் இயக்குனர் புலேந்திரன், காயமுற்ற மக்களுக்கு மருத்துவ உதவி அளித்திட அவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்றிட உதவுமாறு தாங்கள்தான் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
முல்லைத் தீவுப் பகுதியில் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள உடையார்காடு எனுமிடத்தில்தான் ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை உள்ளது. இந்தப் பகுதிக்கு அரசு நிர்வாகத்தை மாற்றுவதற்கு தான் உத்தரவு பிறப்பித்த பின்னரும், சிறிலங்க படையினரின் தொடர்ந்த தாக்குதலால் அது தடைபட்டுள்ளது என்று அப்பகுதிக்கான அரசு முகவர் இமல்டா சுகுமார் தங்களிடன் கூறியதாக தமிழ்நெட்.காம் இணையத்தளம் கூறியுள்ளது.
இதற்கிடையே, காயமுற்ற மக்களை அங்கிருந்து பாதுகாப்புப் பகுதிக்கு கொண்டு வர மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ள ஐ.நா., அதற்கு சிறிலங்க இராணுவமும் விடுதலைப் புலிகளும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.