மும்பை தாக்குதல் மீண்டும் நடக்காமல் பாகிஸ்தான் தடுக்க வேண்டும்: மெக்கெய்ன்
வியாழன், 29 ஜனவரி 2009 (13:26 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் வலியுறுத்தியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக வாஷிங்டனின் கேபிடல் ஹில் பகுதியில் நடந்த செனட் குழு விவாதத்தின் போது இதனைத் தெரிவித்த ஜான் மெக்கெய்ன், அதுபோன்ற நடவடிக்கைகள் மட்டுமே அமெரிக்காவை திருப்திப்படுத்தும் என்றார்.
மும்பை தாக்குதல் தொடர்புடையவர்கள், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகப்படுபவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் என தாம் கருதுவதாக மெக்கெய்ன் அப்போது கூறினார்.
தெற்காசியாவில் உள்ள இரு அண்டை நாடுகளுக்கு (இந்தியா-பாகிஸ்தான்) இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும் எனக் கூறிய மெக்கெய்ன், அதற்கு எந்தவித உதவியையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்றார்.