வாக்குறுதியை மீறி சிறிலங்க படை தாக்குதல்: 21 தமிழர்கள் பலி
வியாழன், 29 ஜனவரி 2009 (11:25 IST)
தமிழர்கள் வாழும் பகுதியில் பொதுமக்கள் மீது சிறிலங்கப் படை தாக்குதல் நடத்தாது என இந்தியாவிடம் வாக்குறுதி அளித்த அந்நாட்டு அரசு, அந்த வாக்குறுதி வழங்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள்ளாகவே அதனை மீறியுள்ளது.
இலங்கையின் வன்னி பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இடைவிடாத எறிகணைத் தாக்குதலில் தமிழ் மக்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நேற்று (புதன்) பிற்பகல் ஒரு மணியளவில் துவங்கி பிற்பகல் 2.30 மணி வரை வன்னிப் பகுதியில் ‘மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பீரங்கி தாக்குதல்கள் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவில் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீதும் நேற்று நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2 சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இன்று வரையில் காயமடைந்தவர்களில் 556 பேர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 200 பேர் மேல் சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார்.
இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் (செவ்வாய்) சென்ற போது சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜ்பக்சவை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ் மக்கள் மீதான சிறிலங்கப் படையினரின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற ராஜபக்ச, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என வாக்குறுதி அளித்தார்.
ஆனால், அந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்கு உள்ளாகவே, அதுவும் பிரணாப் முகர்ஜி கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் வன்னியில் பொதுமக்கள் மீது சிறிலங்கப் படையினர் எறிகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.