பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடரும்: அமெரிக்கா

புதன், 28 ஜனவரி 2009 (17:36 IST)
அமெரிக்காவுக்கு ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், அல்-கய்டாவை முழுவதுமாக வேரறுக்கும் வரை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது இதனை ராபர்ட் கேட்ஸ் தெரிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என பாகிஸ்தானுக்கு தெரியுமா என நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் கார்ல் லெவின் எழுப்பிய கேள்விக்கு, ‘அதுபற்றி பாகிஸ்தானுக்குத் தெரியும’ என பதிலளித்தார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள அல்-கய்டா பயங்கரவாதிகளை முற்றிலுமாக வேரறுப்பதற்கே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்தப் பணி நிறைவடையும் வரை பாகிஸ்தான் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது ராபர்ட் கேட்ஸ் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் புஷ், தற்போதைய அதிபர் ஒபாமா என இருவருமே அல்-கய்டா அமைப்பை ஒழிப்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதால், அல்-கய்டா எங்கிருந்தாலும் அவர்களைத் தேடி அழிப்போம் என்றும் கேட்ஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்