நார்வே அயலுறவு அமைச்சகத்தின் முன்பு நேற்று காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டிருந்தனர். சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையை நார்வே பகிரங்கமாகக் கண்டிப்பதோடு, போரை நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
நார்வே அயலுறவு அமைச்சகம் உரிய பதிலைத் தரும் வரை அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதியோடு தமிழ் மக்கள் நின்றதையடுத்து, மக்களிடம் வந்த இலங்கைக்கான சிறப்பு சமாதான தூதர் ஜான் ஹன்சன் பௌவர், "சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கின்ற போர் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் போரை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அதை நார்வே கண்டிக்கிறது" என்றார்.
நெதர்லாந்தில் தமிழர்கள் போராட்டம்
இதேபோல, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி நெதர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் பெருந்திரளான தமிழர்கள் பங்கேற்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.
"உலகே! உனக்கு கண்ணில்லையா?" என்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்திரளாக தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளுக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பின்னர், நெதர்லாந்து சமவுடமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏவவுட் ஏடர்கங்கிடம் மக்கள் முன்னிலையில் மனு வழங்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர், இலங்கைப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.
இதன்பின் நெதர்லாந்தின் அயலுறவு அமைச்சகத்திற்கு சென்ற தமிழ் மக்கள், அங்கு ஆசிய அயலுறவு விவகார அமைச்சர் பன் டைக்கை சந்தித்து, நேரடியாக வன்னியில் அண்மையில் எடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் ஒளிப்பதிவுகளை கணினித் திரையில் காண்பித்ததுடன் மனுக்களையும் அவரிடம் ஒப்படைத்தனர்.
ஒளிப்பதிவுகளை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த அமைச்சர், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.