இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக அந்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுமத்ராவின் படாங் பகுதியில் இருந்து 240 கி.மீ தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளதாக ஹாங்காங்கில் உள்ள நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆகப் பதிவானதாகவும், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.31 மணிக்கு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி காலை 7.04 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் அந்நாட்டின் பபுவா பகுதியில் இருந்து 95 கி.மீ தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.