விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: சிறிலங்க இராணுவத்திற்கு பேரிழப்பு!
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (12:48 IST)
வன்னிப் பகுதியில் உள்ள அணைக்கட்டு ஒன்றைத் தகர்த்து, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய படைகள் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்க இராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்மடுக்குளம் என்றழைக்கப்படும் வன்னிப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பாசனக் குளத்தின் அணையை நேற்று காலை விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்த்ததாகவும், இதனால் அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் மூழ்கியதாகவும் சிறிலங்க இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழுப்புவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியை கைப்பற்றிய சிறிலங்க இராணுவம் பல இடங்களில் முகாம் அமைத்து இருந்தது மட்டுமின்றி, வெடிபொருள், ஆயுத கிடங்கையும் நிறுவியிருந்தது.
இந்த நிலையில், அணையை குண்டு வைத்து தகர்த்த விடுதலைப் புலிகள், வெள்ளப் பெருக்கில் சிக்கிய இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சிறிலங்க இராணுவத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உதய நாணயக்காரா தெரிவித்தார். ஆனால் உயிரிழப்பு குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இத்தாக்குதலில் 1,500க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும, ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கொழும்புவில் இருந்து வரும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கப் படையினர் சற்றும் எதிர்பாராத வகையில் விடுதலைப் புலிகள் இந்த கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதிலிற்கு முன்னர், முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு நகரின் மேற்குப் பகுதியில் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலை இடைமறித்து தாங்கள் நடத்திய பதிலடியில் சிறிலங்கப் படையினர் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 52 பேர் காயமுற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.