பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் ஹிலாரி கிளிண்டன் பேச்சு
வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:59 IST)
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு பாகிஸ்தானுடன் எந்தவிதமான அணுகுமுறையைக் கடைபிடிக்கும் என்பது பற்றி அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியுடன், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி விவாதித்துள்ளார்.
அமெரிக்காவின் அயலுறவு அமைச்சராக பதவியேற்ற பின்னர் நேற்றிரவு தொலைபேசி மூலம் சர்தாரியைத் தொடர்பு கொண்ட ஹிலாரி, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயலுறவு அமைச்சராக ஹிலாரி பதவியேற்றுக் கொண்டதற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த சர்தாரி, முஸ்லிம் நாடுகளுடன் பரஸ்பர மரியாதையுடன் கூடிய புதியதொரு உறவை அமெரிக்கா ஏற்படுத்திக் கொள்ளும் என ஒபாமா கூறியுள்ளதற்கு வரவேற்புத் தெரிவித்தார்.
எதிர்காலத்தின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விடயத்தில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய முக்கிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது என்றும் ஹிலாரியிடம் சர்தாரி கூறியுள்ளார்.