பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிப்பதே அமெரிக்காவின் பணி: ஒபாமா

வெள்ளி, 23 ஜனவரி 2009 (13:09 IST)
உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதே அமெரிக்க நடத்தி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முக்கிய பணியாக இனி இருக்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான சிறப்பு அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் ஹால்புரூக் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அயலுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் இதற்கான அறிவிப்பை அதிபர் ஒபாமா இன்று வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னர் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த நாடுகளுக்கு கடந்த காலத்தில் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகள் மீது தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கும் இதுவே காரணம்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள அல்-கய்டா, தாலிபான் பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்களை முற்றிலுமாக ஒழித்தால்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முழு வெற்றி பெற முடியும்.

அல்-கய்டா, தாலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அரசு ஸ்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. அந்த அமைப்புகள் முற்றிலுமாக ஒழிக்கப்படாத பட்சத்தில் அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கு வாய்ப்பில்லை என்று ஒபாமா குறிப்பிட்ட ஒபாமா, அவற்றை ஒழிப்பது ஒரே நாளில் நடைபெறக் கூடிய விடயமும் அல்ல எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்