இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்க அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றம் அவைத் தலைவர் வி.ஜே.மு.லொக்கு பண்டார தலைமையில் தொடங்கியதும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, வடக்கு-கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளிலும் 2006 ஜனவரி முதல் இன்று வரை 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 5 பேர் கடத்தப்பட்டுள்ளனர், அவர்களில் 4 பேர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர் என்றார்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்களை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மீண்டும் கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, எண்ணிக்கைகளை மட்டும் தருவதாக கூறினார்.
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்கும் கடத்தப்பட்டதற்கும் யார் பொறுப்பு என்பதையும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிக்கவில்லை.