மும்பை தாக்குதல் விவகாரம்: சீனாவை பிரதிநிதியாக அறிவித்தது பாகிஸ்தான்
வியாழன், 22 ஜனவரி 2009 (18:05 IST)
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்துவதில் பாகிஸ்தானின் பிரதிநிதியாக சீனா செயல்படும் என பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
சீனத் தூதரக குழுவினருக்கு இஸ்லாமாபாத்தில் நேற்றிரவு அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் குரேஷி, ஹீ யாஃபி தலைமையிலான சீனாவின் சிறப்புத் தூதர் குழுவை இந்தியா சென்று தங்கள் சார்பில் பேச்சு நடத்துமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
இந்தியாவிடம் சீன தூதரகக் குழு தெரிவிக்கும் அனைத்து விடயங்களும், பேச்சுகளும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவே கருதப்படும் என்றும் சீனாவிடம் தாம் கூறியதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான்-சீனா ஆகிய இருநாடுகளும் இருதரப்பு, மண்டல, சர்வதேச விவகாரங்களில் பூரண நம்பிக்கையுடன், பரஸ்பர புரிதலுடன் இருப்பதாகவும் குரேஷி அப்போது கூறினார்.