வன்னியில் ஒரே வாரத்தில் 66 பொதுமக்கள் படுகொலை!
வியாழன், 22 ஜனவரி 2009 (14:10 IST)
வன்னியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்காவின் முப்படைகளும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்திய கோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 223 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 14 பேர் நேற்று நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதுடன், 73 பேர் காயமடைந்துள்ளனர்.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளிட்ட வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிலங்கப் படையினர் மேற்கொண்டுவரும் இன அழிப்புப் படையெடுப்பினால், தங்களில் வசிப்பிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட 4 லட்சம் மக்கள் 4 கிராமங்களில் குவிந்துள்ளதாகவும், இந்த மக்களின் மீது தரை, கடல், வான் வழித் தாக்குதல்களை நடத்தும் சிறிலங்கப் படைகள் ஒரு இனப் படுகொலையை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகின்றன என்றும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய கோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 223 பேர் காயமடைந்ததானர். இதில், நேற்று (புதன்கிழமை) நடந்த பீரங்கித் தாக்குதலில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 73 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் புதினம் செய்தி தெரிவிக்கிறது.
விசுவமடுவில் மக்கள் குடியிருப்புகள் மீது நேற்று நடந்த எறிகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் படுகாயமடைந்தனர்.
உடையார்கட்டு குரவு, இளங்கோபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நடந்த எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு, தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சிறிலங்கப் படையினர் தொடர்ச்சியாக நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். இதே பகுதிகளில் காலை நடந்த தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
தேராவில், குரவில் ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகல் சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விசுவமடு, வள்ளுவர்புரம் பகுதிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் நடந்த எறிகணைத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 2 பேர் காயமடைந்தனர்.
உடையார்கட்டு குரவில் பகுதியில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் நடந்த எறிகணைத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்தனர்.
விசுவமடு மயில்வாகனபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த எறிகணைத் தாக்குதலில் ஒரு சிறுமி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்தனர்.
கைவேலிப்பகுதியில் நேற்று பிற்பகல் 4.45 மணிக்கு நடந்த எறிகணைத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு புதினம் தெரிவிக்கிறது.