அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசின் அயலுறவு அமைச்சராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஹுசைன் ஒபாமா நேற்று முன்தினம் இரவு இந்திய நேரப்படி 10.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அவரது அமைச்சரவையின் அயலுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்த ஹிலாரி அப்பதவியை ஏற்பதற்கான அனுமதியை அந்நாட்டு செனட் சபை இதுவரை அளிக்காமல் இருந்து வந்தது.
அயலுறவு அமைச்சர் பதவியில் ஹிலாரி நியமிக்கப்பட்டால், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நன்கொடைகளைப் திரட்டுவதற்காக தனது பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதன் காரணமாக அமெரிக்க செனட் சபையில் ஹிலாரி நியமனத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக நடக்கவிருந்த வாக்கெடுப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில், அமெரிக்க செனட் சபை கூட்டத்தில் ஹிலாரி நியமனத்திற்கு நேற்று ஒப்புதல் தரப்பட்டது. இதற்காக நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.
இதனையடுத்து அமெரிக்காவின் 67-வது வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது கணவரான பில் கிளிண்டன் பைபிளை கையில் ஏந்தியபடி நிற்க, அதன் மீது கை வைத்து ஹிலாரி பதவியேற்றுக் கொண்டார்.