இந்தியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள்: காவரையின்றி ஒத்திவைத்தது ரஷ்யா
இந்தியாவுக்கு வழங்குவதாக கூறியிருந்த அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் நெர்பா ரக நீர்முழ்கிக் கப்பல்களை விநியோகிக்கும் திட்டத்தை ரஷ்யா காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் கொம்மர்சன்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமுர் கப்பல் கட்டுமானப் பகுதியில் அகுலா-2 ரக நெர்ப்பா நீர்மூழ்கிகளை வெள்ளோட்டம் பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிதிப்பற்றாக்குறை காரணமாக கப்பல் தயாரிக்கும் திட்டத்தை தொடர இயலவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதி அமுர் கப்பல் கடுமானப் பகுதியில் ஏற்பட்ட விபத்திற்கு பின்னர், நீர்மூழ்கிக் கப்பல்களை வெள்ளோட்டம் பார்க்கும் பணிக்கான குழு இன்னும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்திற்கு முன்பாக புதிய குழு அமைப்படாது என்பதாலும், அதன் பின்னர் அமைக்கப்படும் குழு ஓராண்டு பயிற்சிக்குப் பின்னரே நீர்மூழ்கிக் கப்பல் வெள்ளோட்டப் பணியில் ஈடுபடும் என்பதாலும் இந்தியாவுக்கு வழங்குவதாகக் கூறியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்கும் பணியை காலவரையின்றி ரஷ்யா ஒத்துவைத்துள்ளது.
இதுதொடர்பாக அமுர் கப்பல் கட்டுமானப் பகுதியில் உள்ள வோஸ்டோக் பிரிவின் இயக்குனர் ஜென்னடி பேஜின் பேசுகையில், கடந்த நவம்பர் 8ஆம் தேதி நீர்மூழ்கிக் கப்பல் வெள்ளோட்டப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 20 பேர் உயிரிழந்து விட்டனர்.
இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் உயிர் தப்பிய சிலரும் தற்போது உடல்தகுதி இல்லாமல் உள்ளனர். அந்தக் குழுவில் இருந்த மேலும் சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி மீண்டும் பணிக்குத் திரும்ப மறுக்கின்றன எனக் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டே 2 சிஹுகா-பி ரக அணு ஆயுதம் தாங்கிக் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வசம் ரஷ்யா குத்தகை அடிப்படையில் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு தாமதங்களால் நடப்பாண்டு ஆகஸ்டில் இந்தியாவுக்கு அந்த நீர்மூழ்கிகளை அளிப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.