பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் நிதியுதவி: யு.எஸ்.

புதன், 21 ஜனவரி 2009 (12:53 IST)
ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதி பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைப் பொறுத்தே பாகிஸ்தானுக்கு ராணுவம் சாரா நிதியுதவி அளிக்கப்படும் என ஒபாமா அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்றுக் கொண்ட பின்னர் வெள்ளை மாளிகை வெளியிடப்பட்டுள்ள அயலுறவுக் கொள்கை பற்றிய வரைவில், பாகிஸ்தானுக்கான ராணுவம் சாரா நிதியுதவியை அதிகரிக்க அதிபர் ஒபாமாவும், துணை அதிபர் பிடெனும் முடிவு செய்துள்ளனர்.

எனினும், ஆப்கானிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றில் பாகிஸ்தானின் செயல்பாடுகளுடன் இந்த நிதியுதவி ஒப்பிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு விவகாரக் குழுவின் தலைவராக ஜோ பிடென் இருந்த போது பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத நிதியுதவி வழங்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிச்சர்ட் லுகாருடன் இணைந்து பிடென் கொண்டு வந்த இந்த மசோதாவில், அடுத்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கான ராணுவம் சாரா நிதியுதவியை ஐந்து மடங்கு (7.5 பில்லியன் டாலர்) உயர்த்துவது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிதியுதவியைக் கொண்டு பள்ளிகள், சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை பாகிஸ்தான் மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில் பாதுகாப்பை மேம்படுத்துவது, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பது, தாலிபான், அல்-கய்டா இயக்கத்தினருக்கு எதிராக ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என அந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி: அதிபர் புஷ் பதவிக்காலத்தில், பாகிஸ்தானின் அப்போதைய அதிபராக முஷாரஃப் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா ஏராளமான நிதியுதவிகளை அளித்தது. இந்த நிதியுதவில் பல பில்லியன் டாலர்கள் என அப்போது கூறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவும், அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அமெரிக்கா வழங்கிய இந்த நிதியுதவியை, இந்தியாவுக்கு எதிரான தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்ததாக குற்றச்சா‌ற்றுகள் எழுந்தது. ஆனால் அதுபற்றி புஷ் அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற ஒரு சில மணி நேரத்தில், பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் கூடிய ராணுவம் சாரா நிதியுதவியே அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்