மனித உடலில் செயற்கை புரோட்டீன்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய ஆய்வில் ஈடுபட்டதற்காக அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானியான டாக்டர். ராம ரங்கநாதனுக்கு எடித் அன்ட் பீட்டர் ஓ'டனல் விருதை டெக்சாஸ் மாகாண மருத்துவ, பொறியியல் விஞ்ஞானக் க்ழகம் வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் இந்த விருது விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் மிகச் சிறந்த ஆய்வை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் இளம் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதை பெறும் நபருக்கு 25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கபடும்.
டாக்டர் ராம ரங்கநாதன், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் பயலாஜி பிரிவில் இயக்குனராக இருந்து வருகிறார்.
இவரது ஆய்வு மனித உடலில் செயற்கை புரோட்டீனை உருவாக்குவது பற்றியது என்பதோடு ஒரு உயிரியல் ஒழுங்கமைப்பு அதன் ஆரோக்கிய மற்றும் ஆரோக்கியமற்ற நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான அடிப்படை ஆய்வுகள் பற்றியதும் ஆகும்.
அதாவது புரோட்டீன்கள், செல்கள் முதல் திசுக்கள், உறுப்புகள் வரை பல்வேறு செயல்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஊடாடி ஒரு சிறந்த உயிரியல் ஒழுங்கமைப்பை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய முழுமையான ஆய்வாகும்.