புலிகள் தாக்குதலில் 18 படையினர் பலி

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (12:45 IST)
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்க படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குத‌லி‌ல் 18 படையினர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று காலை 5 மணிக்கு இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி எறிகணைத் தாக்குதல், பல்குழல் பீரங்கி தாக்குதல் நடத்திக்கொண்டு சிறிலங்கப் படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

சுமார் 1 மணி வரை நடந்த இம்மோதலில் சிறிலங்க படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், மேலும் 18க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்க படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்