உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான்
புதன், 7 ஜனவரி 2009 (18:50 IST)
பாகிஸ்தான் அரசின் ஆளுமைக்கு உட்படாத அந்நாட்டின் சில பகுதிகளால், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜார்ஜ் புஷ் அரசின் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஸ்டீஃபன் ஹேட்லி, அந்நாட்டின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், புதிதாகப் பொறுப்பேற்கும் பராக் ஒபாமா அரசின் அயலுறவுக் கொள்கைக்கு பெரும் சவாலாக விளங்கப் போவது ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் அல்ல. ஆனால் பாகிஸ்தான் பெரும் சவாலாகத் திகழும்.
பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தாலும் அந்நாட்டு அரசின் ஆளுமைக்கு உட்படாத சில பகுதிகளால், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலும் இதன் ஒரு வெளிப்பாடுதான்.
தீவிரவாதிகள் தொடர்ந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் நிலைத்தன்மை பாதிக்கப்படும். அதன் விளைவாக அம்மண்டலம் முழுவதும் கோரச் சம்பவங்கள் உருவெடுக்கும் என ஹேட்லி கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பிரச்சனைகளை தீர்க்காமல், ஆப்கானிஸ்தானில் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. எனவேதான் புதிய அரசுக்கு பாகிஸ்தான் கடும் சவாலாக விளங்கும் எனத் தாம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.