கிளிநொச்சி நகரம் மூன்று முனைகளிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் எந்த நேரமும் அது சிறிலங்க படைகளிடம் வீழ்ந்துவிடும் என்று சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகச் செயலர் கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பரந்தன், இரணைமடு ஆகிய பகுதிகள் சிறிலங்க இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபய ராஜபக்ச, அடுத்த சில தினங்களில் கிளிநொச்சி வீழ்ந்துவிடும் என்றும், எனவே, விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய சில நிலைகளும் சில மாதங்களில் அழிக்கப்பட்டுவிடும். கிளிநொச்சியைப் பிடித்துவிடலாமென சிறிலங்கப் படைகள் கனவு காண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் விரைவில் உண்மை என்னவென தெரியவரும். பரந்தனும், இரணைமடு சந்தியும் வீழ்ந்துவிட்டதால் அழிவை எதிர்கொள்வதா? அல்லது சரணடைவதா? என்பதை புலிகள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
3,000 சதுர கி.மீ. மீட்பு
வடபோர்முனையில் இந்த ஆண்டில் மட்டும் 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக சிறிலங்க படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
மடு, கொக்காவில் பகுதிகளில் 1,903.5 சதுர கி.மீ. பரப்பையும், அடம்பன், பூநகரியில் 1,045.4 கி.மீ. சதுர கி.மீ. பரப்பையும் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எம்.ஐ. ஹெலிகாப்டர் சேதம்
இதற்கிடையே, முல்லைத்தீவுப் புகுதியில் குண்டுவீச்சு நடத்திய சிறிலங்க இராணுவத்தின் எம்.ஐ.24 ஹெலிகாப்டர், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக சிறிலங்க படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன என்று புதினம் செய்தி கூறியுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை பகுதியில் கடந்த வாரம் இந்த ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது விடுதலைப் புலிகள் 0.50 காலிபர் கனரகத் துப்பாக்கியைக் கொண்டு நடத்திய தாக்குதலில் அது சேதமடைந்ததாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.