மும்பை தாக்குதலில் தொடர்பு: லஸ்கர் ஈ தயீபா தளபதி ஒப்புதல்
புதன், 31 டிசம்பர் 2008 (15:21 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் லஸ்கர் ஈ தயீபா அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக, அந்த அமைப்பின் முக்கியத் தளபதியான ஜரார் ஷா ஒப்புக்கொண்டுள்ளார்.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக இம்மாதத் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பதுங்கியிருந்த ஜரார் ஷா கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட் இதழில் வெளியாகியுள்ள செய்தியில், மும்பை தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப், விசாரணையில் அளித்துள்ள தகவல்கள் உண்மைதான் என்று ஜரார் ஷா ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஜரார் ஷாவிடம் பாகிஸ்தான் நடத்திய விசாரணையில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளுக்கும் லஷ்கர்-ஈ-தயீபாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், கராச்சியில் குறைந்தது சில வாரங்கள் தங்கியிருந்திருந்ததாகவும், அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் ஜரார் ஷா கூறியதாக விசாரணையின் போது உடனிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் தற்போது வெளியாகியிருப்பது, சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.