காஸாவில் உடனடியாக போரை நிறுத்துங்கள்: பான்-கி-மூன் வேண்டுகோள்
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (12:31 IST)
காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வர மத்திய கிழக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், சர்வதேச நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகளும் இப்பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தவில்லை எனத் தாம் கருதுவதாகவும், இந்தப் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அரபு நாடுகளைச் சேர்ந்த அயலுறவு அமைச்சர்கள் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இக்கட்டான சூழலை முடிவுக்கு கொண்டு வர துரிதமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான்-கி-மூன் கேட்டுக் கொண்டார்.