காஸா மீதான தாக்குதல் “ஹமாஸுக்கு எதிரான போர்”: இஸ்ரேல்
திங்கள், 29 டிசம்பர் 2008 (18:34 IST)
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸுக்கு எதிராக முழு அளவிலான போரை துவக்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஹுத் பராக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர், காஸா பகுதி மக்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை. ஆனால் ஹமாஸ் இயக்கம், அவர்களுக்கு துணைபுரிபவர்களுக்கு எதிராக முழு அளவிலான போரைத் துவக்கியுள்ளோம். தேவைப்பட்டால் இத்தாக்குதல் மேலும் விரிவுபடுத்தப்படும்.
ஹமாஸுக்கு பலத்த அடி கொடுத்து இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே போரில் இறங்கியுள்ளோம். இதில் காஸா பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் முடிந்தவரை தவிர்ப்போம்.
ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர், இதர பயங்கரவாதிகள் வேண்டுமென்றே மக்களிடையே இருந்து கொண்டு செயல்படுகின்றனர். இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்களை தாக்க மாட்டோம். அதே தருணத்தில் மனிதாபிமான உதவிகளையும் தடுக்க மாட்டோம் என்று அமைச்சர் ஹுத் பராக் கூறினார்.
கடந்த ஜூனில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா இஸ்ரேல் வந்திருந்த போது அவரிடம் பேசியவற்றையும் ஹுத் பராக் அப்போது குறிப்பிட்டார்.
எனது மகள்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது யாராவது என் வீட்டின் மீது ராக்கெட் குண்டுகளை வீசினால், அதனைத் தடுக்க எல்லாவித முயற்சியையும் எடுப்பேன். இஸ்ரேலியர்களும் அதுபோல்தான் செயல்படுவதாக நான் கருதுகிறேன் என ஒபாமா அப்போது கூறியிருந்தார்.
அப்போது ஒபாமா கூறியதைத்தான் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என அமைச்சர் பராக் தெரிவித்தார்.
காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் எல்லைப்புற நகரங்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்துவதை பலமுறை கண்டித்த இஸ்ரேல், கடந்த சனிக்கிழமையன்று காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலியப் படைகள் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. அத்தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இன்று 310 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.