பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: பலி 41 ஆக உயர்வு
திங்கள், 29 டிசம்பர் 2008 (15:19 IST)
பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள புனெர் நகரில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 41 ஆக பேர் உயிரிழந்துள்ளது.
அந்நாட்டின் புனெரில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதற்காக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு செய்ய ஏராளமானோர் கூடியிருந்த சமயத்தில் தற்கொலைப் படை தீவிரவாதி, குண்டுகளுடன் கூடிய காரில் வந்து தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் 2 காவல்துறையினர், 5 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் காரணமாக 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பள்ளிக் கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 11 உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரி-ஈ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகளை கொன்றதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.