11 மாதங்களில் 11,000 படையினர் தப்பியோட்டம்!
திங்கள், 29 டிசம்பர் 2008 (13:43 IST)
சிறிலங்கப் படைகளில் இருந்து கடந்த 11 மாதங்களில் 11,000 பேர் தப்பியோடி விட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றை மேற்கோள் காட்டி புதினம் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்க அரசின் மொத்தப் படைபலம் பற்றிய உண்மையான விவரங்கள் சில காரணங்களால் வெளியில் தெரிவிக்கப்படாத போதும், அதன் பலம் 3,00,000 என எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஊர்க்காவல் படையினரும், காவல்துறையினரும் அடக்கம்.
படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் 38,000 பேரைப் படையில் சேர்த்துள்ளதாகப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 11,000 க்கும் அதிகமான படையினர் படைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
அரசு மேற்கொண்டு வரும் தீவிர பிரச்சாரத்தினால் அதிக அளவிலான இளைஞர்கள் படைகளில் இணைந்து வருகின்றனர். இதனால் ஆயுதத் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆயுதங்கள் வாங்க அதிக நிதி தேவை.
எனவே 2009 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதி 177.1 பில்லியன் ரூபாய் ஆக இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. இது தற்போதைய ஆண்டைவிட 11 பில்லியன் ரூபாய்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அச்செய்தி கூறுகிறது.