கிளிநொச்சியில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 2 கிலோமீட்டர் பகுதி கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைநகரமாகத் திகழும் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக முப்படைகளையும் கொண்டு இலங்கை ராணுவம் முழுவீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக புலிகளும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் கிளிநொச்சியில் கடந்த சில காலமாக இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கிளிநொச்சியின் முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் நேற்று காலை இலங்கை ராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இலங்கை ராணுவ வீரர்கள் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ராணுவத்தால் கடந்த 16ஆம் தேதி பிடிக்கப்பட்ட 2 கிலோமீட்டர் முன்னரண் பகுதியை அவர்களிடம் இருந்து கைப்பற்றி விட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் பத்து உடல்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவத்தினருக்கு இந்த தாக்குதலில் பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும் புலிகள் தரப்பு செய்தி தெரிவிக்கிறது.
இந்த அதிரடி தாக்குதலின் போது ராணுவத்தினருக்கு ஒத்துழைப்பாக விமானப்படை விமானங்கள் தீவிர தாக்குதல்களை நடத்தின என்றும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் பற்றியோ, உயிரிழந்த வீரர்கள் பற்றியோ ராணுவ தரப்பில் உடனடியாக செய்திகள் ஏதும் இல்லை.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்டைகளில் பலியானதை தொடர்ந்து கைப்பற்றிய 38 ராணுவ வீரர்களின் உடல்களை இரண்டு கட்டங்களாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்ததாக விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.