கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவரே: நவாஸ் ஷெரீப்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (15:03 IST)
இஸ்லாமாபாத்: மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறிய நிலையில், நவாஸ் ஷெரீப்பின் இந்தக் கருத்து அவருக்கு சவால் விடுப்பது போல் கருதப்படுகிறது.

இதுதொடர்பாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு ஷெரீப் அளித்துள்ள பேட்டியில், அஜ்மல் கஸாப் கிராமத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில் கஸாப் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரது பெற்றோர் யாருடனும் பேச அனுமதிக்கப்படுவது இல்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. கஸாப் பெற்றோரை மக்களும், ஊடகங்களும் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை என்ன என்பது உலகிற்கு தெரியவரும் என்றார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் தலைமையாகக் கொண்டு நாட்டை ஆளும் கூட்டணி அரசு, தோல்வியுற்றதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் சர்தாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அதிபர் சர்தாரி அளித்த பேட்டியில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், இதுவரை அதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்