மும்பை தாக்குதலின் பின்னணியில் தாவூத் இப்ராஹிம்: ரஷ்யா

வியாழன், 18 டிசம்பர் 2008 (17:05 IST)
மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா தேடி வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளதாகவும், அவரது உதவியுடன் மும்பைத் தாக்குதலை பயங்கரவாதிகள் சதி திட்டமிட்டு நடத்தியுள்ளதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாவூத் இப்ராஹிமின் போதைப் பொருள் கடத்தல் பிரிவுதான் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேவையான நிதியுதவியை அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய உளவு அமைப்புகள் திரட்டிய தகவல்களின்படி தாவூத் இப்ராஹிம் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி மும்பை தாக்குதலை நடத்துவதற்கு உதவி புரிந்தது தெரிய வந்துள்ளதாக ரஷ்ய போதை ஒழிப்புப் பிரிவுத்துறை இயக்குனர் விக்டோர் இவானோவ் அந்நாட்டின் ரோஸிஸ்காயா கஸெட்டா (Rossiskaya Gazeta) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், எப்படி ஒரு போதை கடத்தல் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்பதற்கு மும்பை தாக்குதல் பகிரங்கமாக உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியான அனாடோலி சஃபோனோவ் தலைமையிலான ரஷ்ய அதிகாரிகள் குழு நடத்திய கூட்டு கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் போதைப் பொருள் கடத்தல் குழுக்களால் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இவ்விடயத்தில் ஒரு நாடுகளும் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பதே, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சம் என்பதால், இத்துறையில் இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்