வரலாறு காணாத மழை! ரோம் நகரில் நெருக்கடி நிலை பிரகடனம்

சனி, 13 டிசம்பர் 2008 (14:56 IST)
இத்தாலியில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் முக்கிய நதியான தைபர் நதியில் இருந்து வெள்ள நீர் கரையை உடைத்துக் கொண்டு நகருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ரோம் நகரில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் தைபர் நதியில் த்ண்ணீரின் அளவு 16 அடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் நதியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் நகருக்குள் வெள்ளநீர பாயக்கூடும் என்பதால், ரோம் நகரில் நெருக்கடி நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ரோம் நகரில் பல தெருக்களில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஏதோ மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது போல் இருக்கிறது" என்று ரோம் நகர மேயர் அங்குள்ள நிலவரங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை மழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு எந்திரங்கள் அனைத்தும் ரோமிற்கு விரைந்துள்ளன. தைபர் நதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்