பிரேசிலிடம் இருந்து 100 ஏவுகணைகள் வாங்குகிறது பாக்.
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (12:10 IST)
வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை அழிக்கும் சக்தி படைத்த 100 ஏவுகணைகளை பிரேசிலிடம் இருந்து பாகிஸ்தான் வாங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் மெக்ட்ரான் (Mectron) என்ற நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் நடுத்தர தூர பிரிவைச் சேர்ந்த மார்-1 (MAR-1) ரக ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய பிரேசில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரக ஏவுகணைகளைக் கொண்டு எதிரிகளின் ராடார் கண்காணிப்பு மையங்களை அழிக்க முடியும்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இவற்றை பாகிஸ்தானுக்கு வழங்குவது இந்தியாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் பதிலளித்தார்.
அதில், கடந்த ஏப்ரல் மாதமே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விட்டது. மேலும் நாங்கள் பேரம் பேசுவது பாகிஸ்தான் அரசுடன்தான். பயங்கரவாதிகளிடம் அல்ல. எனவே பயங்கரவாத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது பாகிஸ்தான் அரசிடன்தான் உள்ளது என்றார்.
இந்த ஏவுகணை விற்பனை பேரம் 10.8 கோடி டாலர் (ரூ.540 கோடி) மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.